போதை இல்லாத உலகத்தை உருவாக்குவோம்

போதை இல்லாத உலகத்தை உருவாக்குவோம்

இன்றைய நவீன காலத்தை பொறுத்தவரையில் இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்கும் ஒரு ஆட்கொல்லியாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இதனால் வரும் பேராபத்தை சிலர் உணர்ந்தும் பலர் உணராமலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தம்மை தாமே அழித்துக் கொண்டு வருகின்றனர்.

வயதானவர்கள்தான்போதைப்பொருட்களை பாவிப்பவர்கள் என்ற காலம் முடிந்து தற்பொழுது எந்தவொரு வயது வித்தியாசமும் இன்றி பெரியவர்கள், சிறியவர்கள், வாலிபர்கள், யுவதிகள், ஆண்கள், பெண்கள் என்ற எந்த ஒரு வேறுபாடுமின்றி மிகவும் சாதாரணமாக அனைவரும் இந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள் எண்ணிலடங்காதவையாக காணப்படுகின்றன.அதிலிருந்து மக்களையும், எதிர் கால இளைஞர் சமுதாயத்தையும் பாதுகாப்பது காலத்தின் தேவையாக காணப்படுகிறது.

நமது இலங்கை நாடு உட்பட ஏனைய உலக நாடுகளிலும் பல்வேறுபட்ட வித்தியாசமான போதைவஸ்துகள் தயாரிக்கப்பட்டும் விற்பனைசெய்யப்பட்டும் வருகின்றன.உதாரணமாக மதுபானம், புகையிலை, ஹெரோயின், அபின்,கஞ்சா,போதையை ஏற்படுத்தும் தடுப்பூசிகள், போதையை ஏற்படுத்தும் மாத்திரைகள், தூள் வகைகள் என கூறிக்கொண்டே போகலாம் காலம் போக போக இன்னும் இன்னும் வித்தியாசமான போதைவஸ்துகள் தயாரிக்கப்படும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.இவ்வகையான போதைப்பொருட்கள் பல விதங்களிலும் பல வடிவங்களிலும் மக்கள் மத்தியில் நாளாந்தம் கைமாற்றம் செய்யப்பட்டும் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

சிலர் இதனை கண்டித்தும் பலர் கண்டும் காணாதது போல் தமது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்  என்பதே.வீடுகளிலும் ,கடைத்தெருக்களிலும்,மூளை முடுக்குகளிலும் என விற்பனைசெய்யயப்பட்டு வந்த போதை எனும் ஆட்கொல்லி பொருட்கள் தற்பொழுது  பல மனித விசகிருமிகளினால் பாடசாலைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.கல்வி கற்க சென்ற பல மாணவர்கள் கஞ்சா அடித்த வண்ணம் வீடு திரும்புகின்றனர்.இப்படியே போனால் நாட்டை கட்டிக் காக்க வேண்டிய எதிர் கால கல்விமான்கள் உருவாக மாட்டார்கள்,நாட்டை வீழ்த்தும் போதைமான்களே உருவாக்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

இன்றைய காலத்தை பொறுத்தவரையில் பலரிடத்திலும் பரவலாக காணப்படும் ஒரு போதைப்பொருள் பாவனையாக மதுபானப் பாவனை காணப்படுகின்றது.ஒரு நாளில் ஒரு வேளைக்கான உணவை சாப்பிடுகிறார்களோ இல்லையோ ஆனால் தவறாமல் மதுவை அருந்தி வருகின்றனர் அதற்கு அடிமையான மூடர்கள்.மதுவை தமது நாளாந்த பழக்கமாக்கி  அவர்களது வாழ்நாட்களையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.பல நேரத்தில் பலரது மனதிலும் எழுகின்ற ஒரு வினா ஏன் மக்கள் இந்த மதுவை அதிகம் அதிகம் அருந்துகின்றனர்? இவ்வாறான வினா எம் மனதில் தோன்றினால் அது குறித்து எமக்கு எழும் பதில் விசத்தை குடித்தால் உயிர் போகும் என்று தெரிந்து தெரிந்து அதனை குடிப்பவன் முட்டாள்.இவ்வாறு இருக்க அதனை குடிக்க காரணம் ஒன்று தேவையா என்ன என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் மது, அருந்துபவர்களில் பலர் கூறுவதானது மது அருந்துவதால் ஒரு சுதந்திர உணர்வை ஏற்படுகின்றது, உடலிற்கு அதிக சக்தி கிடைக்கிறது,களைப்பை நீக்குகிறது என மதுவுக்கு அடிமையான பல மூடர்கள் சொல்லிக் கொண்டு திரிகின்றனர், ஆனால் உண்மையில் மது அவர்களது உடலாரோக்கியத்தை கறையான்கள்  மரக்கட்டைகளை அரிப்பது போல் அரித்துக் கொண்டிருப்பதை அவர்கள் அறியவில்லை.மதுப்பாவனை மனிதனின் மூளையையும்,நரம்பு மண்டலத்தையும் பாதித்து ஒட்டுமொத்தமாக மனிதனின் உடல் நலத்தை சீர்குலைக்கின்றது.அதுமட்டுமன்றி மது அருந்துவதினால் கல்லீரல் பாதிக்க்கப்பட்டு கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகின்றது.உணவுக்குழாய், வாய், தொண்டைகளில் புற்றுநோய் ஏற்படுகிறது.மது அருந்துபவர்களது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியானது குறைவடைகின்றது.

இதன் காரணமாக மதுஅருந்துபவர்களுக்கு தொற்று நோய்கள் வந்தால் அதை குணப்படுத்துவது கடினமாக இருக்கும்.மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்பது இதன் மூலம் உண்மையாகிறது.மது அருந்நுபவர்கள் தம்மை தாமே அழித்துக் கொண்டும் பிறரது வாழ்க்கையையும் கேள்விக் குறியாக்குகின்றனர்.பல குடும்பங்களில் தந்தைமார் மதுபோதையில் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போயிற்று.தினமும் கணவன் மனைவி பிரச்சினைகள், குழந்தைகள் இதன் காரணமாக அல்லல் படல், அவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படல் , சுற்றியுள்ளவர்கள், உறவினர்கள் என அனைத்து சமூகமும் ஒரு மதுபோதையாளியினால் பாதிக்கப்படுகின்றனர்.மகிழ்ச்சிக்காக மதுவை குடிக்கும் இந்த கயவர்கள் மற்றையவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு குடித்து சின்னாபின்னமாகி யுள்ளனர்.

மக்களிடையே பெரும்பாலும் காணப்படும் மற்றுமொரு போதைப்பொருள் பாவனையே புகையிலை பாவனை.காட்டுத்தீ எவ்வாறு வேகமாக பரவுகின்றதோ அதே போல நாட்கள் செல்ல செல்ல நாட்டில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.பேனாவை பிடித்து எழுத வேண்டிய கைகள் இன்று தீப்பெட்டியை பற்றவைத்து சிகரெட்டை பிடிக்கிறது.எந்தவொரு வயது வித்தியாசமும் இன்றி பெரியவர்கள்,சிறியவர்கள் என அனைவரும் ஒரே நிலையில் போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

ஒரு குற்றவாளி தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்து அது சரியென நிரூபிக்க ஆயிரம் காரணங்களை சொல்லுவான் .அது போன்றே இந்த புகையிலை பாவனையாளர்களும் தாம் ஏன் சிகரெட் குடிக்கிறோம் என்பதற்கு இவ்வாறான காரணங்கள முன்வைக்கின்றனர்.புகைபிடிப்பதால் சுறுசுறுப்பு கிடைக்கும், ஊக்கம் அதிகரிக்கும், சமூகத்தில் புகைபிடிப்பவர்களுக்கு (சிகரெட்) ஒரு தனி கர்வம் இருக்கும், மன ஆறுதல் கிடைக்கும் என அகராதியிலே இல்லாத முட்டாள்தனமான பல காரணங்களை கூறிக்கொண்டு தம்மை தாமே அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

பலர் புகைப்பிடிப்பதை சாதாரணமாக கருதுவதன் காரணத்தினால் தான் இன்று அதிகமானோர் புகையிலை பாவனையினால் இருதயநோய்க்கு உள்ளாகி திடீர் மரணங்களை எய்துன்றனர்.இதனை எமக்கு அன்றாட வாழ்வில் காணக்கூடியதாக உள்ளது.எம்மில் பலர் நமது குடும்பத்திலும் சரி ,உறவினர்களாயினும் சரி,அயலவர்களாயினும் சரி ஒருவராவது புகைத்தலுக்கு அடிமைபட்டவர்களாக இருப்பர்.அவ்வாறானவர்களில் பலர் இந்த புகையிலை பாவனையினால் திடீர் மரணங்களை எய்திய சந்தர்ப்பங்கள் பல குடும்பங்களில் நடக்கின்ற மறுக்க முடியாத உண்மையே.புகைப்பிடித்தலானது தொன்னூறு வீதம் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது.

மேலும் புகைப்பிடிப்பதனால் வயிறு,தலை, கழுத்து, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுகின்றது.சாதாரணமாக ஒரு நபர் ஒரு நாளைக்கு இரண்டு சிகரெட்டுகள் வீதம் குடிப்பவர் எனில் ஒரு கிழமைக்கு பதின்நான்காகவும், ஒரு மாதத்திற்கு ஐம்பத்து ஆறாகவும், ஒரு வருடத்திற்கு அறுநூற்றி எழுபத்து இரண்டாகவும் அதிகரிக்கின்றது.புற்றுநோய் தனது உடலில் ஏற்படுவதற்கு அவரே தனது உடலை சிகரெட் புகையில் உள்ள நச்சுத்தன்மை நிறைந்த நிக்கோட்டினை உடலில் நிரப்பி தனது உடலை தயார் படுத்திக் கொடுக்கின்றனர்.இறுதியில் பரிதாபகரமான முறையில் புற்றுநோயால் அவஸ்தை பட்டு இறந்து போகின்றனர்.ஒவ்வொரு புகையாளிகளது வாழ்க்கையும் இவ்வாறு துன்பகரமானதாகவும் குறுகியதாகவுமே காணப்படுகின்றது.இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் புகை கொஞ்சம் கொஞ்சமாக உள் நுழைந்து உயிரை குடித்துக் கொண்டிருப்பதை அறிந்தும் பலர் சாதாரணமாக புகைப்பிடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இவை மாத்திரமல்ல இன்று இளைஞர்கள் மத்தியில் பல வித்தியாசமான போதைவஸ்துகள் பாவனை செய்யப்பட்டு வருகின்றன அதில் போதையை ஏற்படுத்தும் தடுப்பூசிகள், மாத்திரைகள், தூள் வகைகள் இவற்றை உடலில் செலுத்திக் கொண்டு தம்மை தாமே அழித்துக் கொண்டு வருகின்றனர்.பலர் இந்த போதைவஸ்துகள் இல்லாத சந்தர்ப்பங்களில் தமது உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்.இவற்றிலிருந்து இந்த உலகத்தையும் எதிர் கால சமுதாயத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.இன்றைய காலத்தை பொறுத்தவரையில் நமது கண்களுக்கு வெளிப்பார்வைக்கு அனைவரும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவுமே தெரிவர்.

ஆனால் ஆராய்ந்து பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் ஏதோ ஒரு போதைப் பொருளுக்கு அடிமையானவர்களே.இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையாகியருப்பது இளைஞர் சமுதாயமே.ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு முறையில் இந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றனர்.அது எவ்வாறெனில் ஒரு குடும்பத்தில் தந்தை புகையிலையோ மதுபானமோ அருந்துபவர் எனில் அதிகமான குடும்பங்களில் குழந்தையும் தந்தைய போன்றே வீட்டில் யாருமில்லாத நேரங்களில் அல்ல வெளியில் மது அருந்தி பார்க்கும் அல்லது புகைபிடித்து பார்க்கும், ஒரு முறை செய்து பார்த்து விட்டு தினமும் அதனையே வழக்கமாக்கி நாளடைவில் தானாகவே போதைப் பொருளுக்கு அடிமையாகின்றது.

இது இன்று பல குடும்பங்களில் நடந்து கொண்டு இருக்கின்ற உண்மை. நண்பர்கள் பலர் சேருகின்ற சந்தர்ப்பங்களில் நண்பர்களின் தூண்டுதல்களால் போதைக்கு அடிமையானவர்கள் பலர் உள்ளனர்.மேலும் திரைப்படங்களை பார்த்து அதில் வரும் காட்சிகளை பார்த்து போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களும் பலர் உள்ளனர்.இவற்றை தடுக்க ஒரே வழி பெற்றோர் தம் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்க வேண்டியதே.பிள்ளை எங்கே செல்கிறது, யாருடன் நட்பு வைத்திருக்கிறது, தனிமையில் இருக்கும் நேரத்தில் பிள்ளையை கன்கானிப்பது என பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் கரிசனையுடனும் கண்டிப்புடனும் இருக்க வேண்டும்.

முதலில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள்,அதனை தயாரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.போதைப்பொருள் உற்பத்தி செய்பவர்களை பிடித்து அவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலே நாட்டில் பல உயிர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றலாம். போதைப்பொருட்களை தயாரித்து உற்பத்தி செய்பவர்கள் அனைவரும் என்னை பொறுத்தவரையில் கொலையாளிகளே.ஏனெனில் அதிக போதை ஒரு நாள் நிச்சயம் ஒவ்வொரு உயிரையும் பறிக்கும்.ஒவ்வொரு உயிரின் இறப்புக்கும் காரணமானவர்கள் அந்த போதைப்பொட்களை தயாரிப்பவர்களே.

இன்று நாடு முழுவதும் போதை தடுப்பு சட்டங்கள் பல அமுல்படுத்தப்பட்டுள்ளன.போதை மறுவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் எனினும் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர் என்பது கவலைக்குரிய விடயம்.போதைக்கு அடிமையானவர்களை போதை மறுவாழ்வு மையங்களில் இனைப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு புது வாழ்வை பெற்றுத் தரலாம்.

மேலும் கடைத்தெருக்களிலும், ஆங்காங்கே மூளை முடுக்குகளிலும், பாடசாலைகளிலும் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை நாம் கண்டால் அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தி அவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.போதை ஒழிப்பு நிகழ்வுகளை எமது ஊர்களிலும், பாடசாலைகளிலும் ஏற்பாடு செய்ய வேண்டும், போதைப்பொருள் பாவனையின் கொடூர விளைவுகளை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்ய வேண்டும்.போதைக்கு அடிமையானவர்களுக்கு நல்ல பல ஆலோசனைகளை உயர்ந்த உளவளத்துறை அதிகாரிகள் மூலம் வழங்கி அவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து முற்று முழுதாக வெளியே வர வைக்க வேண்டும்.

எனவே இந்த நொடியில் இருந்து எமது சமூகத்தை போதை எனும் கொடிய விசக்கிருமியிடம் இருந்து பாதுகாக்க எம்மால் முடியுமான அத்தனை நடவடிக்கைகளையும் மேறாகொள்ள முன்வருவோம் .போதை இல்லாத ஒரு உலகத்தை உருவாக்குவோம்!

Rtr. Fathima Rismina

Share this content:

9 COMMENTS

comments user
Jasi

Great one . True words .

    comments user
    Anonymous

    Yes , you are correct

comments user
Nisha

Supper

comments user
Hi

Very good to study and interest

comments user
Hi

Very bad you are

comments user
Mithush

Hi

comments user
Dharshan

Useful for stady

comments user
Anonymous

True words

comments user
Anonymous

Nice

Leave a Reply

Your email address will not be published.