பெண் இல்லை பேய்
துரதிர்ஷ்டவசமாக அன்று வேலை முடிந்து எப்பொழுதும் நான் வீட்டுக்கு போகும் பேரூந்தை தவற விட்டு விட்டேன்…
என்ன செய்வதென்று அறியாமல் சாலைஓரமாய் நின்று யோசித்து கொண்டு இருக்கும் நிமிடம் அவளிடம் இருந்து பதற்றமான தொலைபேசி அழைப்பு வந்தது. நான் பேசும் முன்பே பதற்றத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியவளிடத்தில் நடந்ததை பக்குவமாய் எடுத்துக் கூறினேன்.. இன்று ஏதாவதொரு ஹோட்டலில் தங்கி விட்டு நாளை காலை வீட்டுக்கு வருவதாய் கூறி அவளது பேச்சுக்கு காத்திருக்காது அழைப்பை துண்டித்து விட்டு அவசரமாக நடந்தேன்..களைப்பு மிகுதியில் ஒருவாரு ஒரு முச்சக்கர வண்டியில் ஏறி அந்த ஹோட்டலிற்கு வந்து சேர்ந்தேன். அது தான் மவுன்ட் லவினியா ஹோட்டல்.
இரவின் தேவதை சந்திரன் வானத்தின் மீது தீராத காதல் கொண்டு பௌர்ணமி நிலவாய் வானில் ஜொலித்துக் கொண்டிருக்க , வானத்தின் மீது கோபம் கொண்ட கடல் அலைகளோ சீற்றமாய் பொங்கி எழும்பி தரை நோக்கி வேகமாய் மோதிக் கொண்டிருந்தது அவ் அமைதியான இரவினிலே…அந்த ஆழமான ஆழியிற்கு மேலும் அழகு சேர்ப்பதாய் பக்கத்தில் அமைந்திருந்தது மவுன்ட் லவினியா ஹோட்டல், சுற்றி எங்கும் உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்கள் கடல் நோக்கி சாய்ந்தும் அந்த தென்னை மரங்களின் நடுவே ஒய்யாரமாய் நான்கடுக்கு மாடிகளை கொண்டு பிரம்மாண்டமாய் காட்சியளித்தது மவுன்ட் லவினியா ஹோட்டல்…
பார்ப்பதற்கு பிரம்மாண்டமாய் காட்சியளித்த அந்த ஹோட்டலில் அன்று இரவு தங்குவதை பதிவு செய்ய உள்ளே நுழைந்தேன்… மஞ்சள் நிறத்தில் வரிசையாக போடப் பட்டிருந்த கதிரைகளிலே ஒரே ஒரு அழகான பெண் வெள்ளை நிற சாரி அணிந்து கூந்தலை அவிழ்த்து போட்டவளாய் அவள் மாத்திரம் அமர்ந்து இருப்பதை கண்டு சிறிது ஆச்சரியம் கொண்டேன். நேரம் இரவு பதினொன்றை தாண்டியதால் தான் இந்த மக்கள் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்பதை எனக்கு நானே ஊகித்தவனாய் கேபினிள் நின்ற அந்த இரு இளம் பெண்களிடம் என் பெயரை பதிவு செய்து விட்டு நான்காவது மாடிநோக்கி விரைந்தேன்…கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல ஏசி குளிர் கும்மென மூக்கில் நுழைந்து காது வழியாக வந்து இதமளித்தது. சுற்றி எங்கும் கண்ணாடிகளால் மாத்திரம் ஆன ஜன்னல்கள் போடப்பட்டு அறை நடுவே விலை உயர்ந்த கட்டில்கள் போடப்பட்டு பார்ப்பதற்கு ஆடம்பரமாய் இருந்தது அந்த அறை…களைப்பை போக்க குளியலறை சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்து இரவுணவை ஆர்டர் செய்தேன்…
அந்த இரவுப் பொழுதில் ஜன்னல் வழியாக நின்று அந்த நீலக்கடலை பார்த்து ரசித்து கொண்டு இருப்பது மனதிற்கு இதமாக இருந்தது. அவ்வேளை தான் அவளை கண்டேன் நான் இந்த ஹோட்டலில் பதிவு செய்ய வரும் நேரம் அங்கே வெள்ளை நிற சாரி அணிந்து அமர்ந்து இருந்த அதே பெண்மணி இப்பொழுது கடற்கரையை நோக்கிய வண்ணம் நின்று கொண்டிருப்பதை கண்டேன். ஆச்சரியமாக இருந்தது என் கண்களோ நீலக்கடலை நோக்குவதை தவிர்த்து அந்த பெண்ணை போக்குவதில் கவனம் செலுத்தியது. அந்த நேரம் பார்த்து யாரோ கதவு தட்டும் ஓசை பார்வையை விலத்தி போய் கதவை திறந்தேன் ஆம் நான் ஆர்டர் செய்த இரவுணவை கொண்டு வந்து இருந்தான் அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒரு இளவயது வாலிபன் என்னிடம் உணவை தந்து விட்டு கண் சிமிட்டும் நொடியில் அங்கிருந்து சென்று விட்டான். மிகுந்த பசியில் இருந்ததால் மீதம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தேன்.. கைகளை கழுவிக்கொண்டு மீண்டும் அந்த ஜன்னல் வழியாக நீலக்கடலை நோக்க அந்த இருள் சூழ்ந்த கடலினை பார்த்தவாறு தனது வரண்ட கூந்தலை அவிழ்த்து போட்டவாறு கண்களில் நெருப்பு பறக்க அழுகிய முகத்துடன் நின்று கொண்டு இருந்தாள் அந்த பெண் ஆம் நான் ஏலவே பார்த்த அந்த பெண் அல்ல பேய்.கடலை பார்த்து கொண்டு இருந்த அவளது கொடூர விழிகள் கோரமாய் என்னை நோக்க சட்டென புடவையால் ஜன்னலை மூடிவிட்டு கட்டிலில் வந்து படுத்துக் கொண்டேன்.
பயத்தில் முகமெல்லாம் வியர்த்து கொட்டியது, கண்களை மூட அந்த கோரமான உருவமே மனக்கண் முன் வந்து சென்றது.. எழுந்து வெளியே செல்லவும் பயமாய் இருந்தது போர்வையால் உடம்பை முழுவதுமாய் மூடிக் கொண்டு இலேசாக முகத்தை திறந்து பார்க்க இருக்க யாரோ ஜன்னல் ஓரம் கூந்தலை அவிழ்த்து போட்டவாறு நிற்பதை கண்டேன். ஆம் அப்பொழுது கடல் ஓரத்தில் நின்ற அந்த உருவம் இப்பொழுது நான் வசிக்கும் ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டு இருக்கிறது. சட்டென போர்வையை போர்த்தி கொண்டேன் பயமிகுதியில் தொண்டை வரண்டு போக மெதுவாக உமிழ் நீரை விழுங்கினேன்.
மீண்டும் யாரோ கதவு தட்டும் ஓசை, நடப்பது நடக்கட்டும் என்று அவசரமாக எழுந்து மின்விளக்கை போட்டேன் சுற்றி யாரும் இல்லை நிம்மதியடைந்து போய் கதவை திறந்தேன் அங்கே நின்றது அந்த எரிந்த உருவம். பார்த்ததும் உடம்பில் உயிர் இருந்தும் இல்லாதது போல் உணர்ந்தேன் கதவை வேகமாக அடைத்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டேன். பயத்தில் நடுங்கினேன் என்ன செய்ய ஏது செய்ய ஒன்றும் புரியவில்லை…அந்த நேரம் பார்த்து கட்டிலுக்கு நேராக இருந்த கண்ணாடியை நோக்கினேன் அந்த எரிந்த அழுகிய உருவம் என் தலைமீது ஏறி அமர்ந்து கொண்டு இருந்தது… பயத்தில் கூச்சல் போட்டு கொண்டு விழித்தேன் அது கனவா இல்லை நனவா ஒன்றும் புரியவில்லை…
மீண்டும் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு தூங்கினேன் ஏதோ ஒன்று என் கைகளுக்கு பிடிபட அது என்னவென்று பார்த்தேன் ஒரு அழுகிய இரத்தம் படிந்த கை என் கைகளை பற்றிக் கொண்டு இருந்தது… கத்தினேன் கதறினேன் அறையை விட்டு வெளியேற துடித்தேன். ஆனால் அந்த அழுகிய கை என் கையை விடவில்லை…நீண்ட நேர முயற்சியின் பின்னர் அந்த அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தேன்…இதற்கு முன்னர் மின்விளக்குகளால் பிரகாசித்த அந்த ஹோட்டலில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது அந்த ஹோட்டலில் எந்த ஒரு பணியாளரையும் காணவில்லை…மாடிப்படிகளில் கால்வைத்து அவசரமாக கீழே வந்து சேர்ந்தேன்… இருள் மட்டுமே யாரையும் காணவில்லை…
அங்கிருந்து ஓட்டம் பிடித்தேன் போகும் இடமெல்லாம் அந்த வெள்ளை நிற சாரியில் அழுகிய கோரமான அந்த பெண்ணே கூந்தலை அவிழ்த்து போட்டவாறு நின்றாள்.
எங்கு போக என தெரியாமல் ஓடினேன், இறுதியில் ஒரு பாறையில் முட்டி மோதினேன் இரத்தம் சீறிப்பாய்ந்தது…கண்களை மூடினேன் மயங்கினேன். இப்பொழுது அதிகாலை கண்களை திறந்து பார்க்கிறேன் அந்த ஹோட்டலில் தான் இன்னும் இருக்கிறேன். இரவு நடந்தது அனைத்தும் கனவு என நினைத்து சற்று நிம்மதியடைந்தேன்.
அவசரமாக எழுந்து எனது பையை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரான அந்த வேளை தான் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன் இரத்தம் வடிந்த தழும்பு அப்படியே மறையாது இருந்தது…
நெற்றி வெடித்து காயமாகி இருந்தது…
அப்போ நடந்தது கனவில்லை…
அதற்கு மேலும் அங்கே இருக்காது அவசரமாக கீழே சென்றேன்…அதே பெண் இன்னும் அதே இடத்தில் அமர்ந்து இருக்கிறாள் ஒரு மோகினியாக…
Rtr. பாத்திமா ரிஸ்மினா
Share this content:
1 COMMENT