எனது நாட்குறிப்பின் ஒரு பக்கம்…

எனது நாட்குறிப்பின் ஒரு பக்கம்…

புத்தகம் வாசிப்பது என்றால் யாருக்கு தான் புடிக்காது, அதிலும் பல அடுக்கு மாடிகளைக் கொண்டு அழகாக நேர்த்தியாக அமைந்திருக்கும் ஒரு நூலகத்தில் போய் அமர்ந்து புத்தகங்களை வாசிப்பதற்கு ஈடாக என்ன மகிழ்ச்சி இந்த உலகில் இருந்து விட போகிறது…

புத்தகம் வாசிக்க கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நண்பியுடன் சென்ற வேளை ஒரு வேடிக்கையான அனுபவம் கிடைத்தது அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்று விரிவுரைகள் முடிந்து நானும் எனது சக தோழிகளும் வெட்டி பேச்சு பேசியவர்களாக வந்து கொண்டிருந்தோம். வந்து கொண்டிருந்த வேளை எதேர்ச்சையாக என் கண்கள் நூலகம் நோக்கி விழ அன்று புவியியல் பாட விரிவுரையாளர் கூறிய ஒரு அறிவுறை சட்டென என் மனதை தட்டி சென்றது. அவர் கூறியதெல்லாம் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கான ஒரு பெரிய வளம் இந்த நூலகம் அதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் அறிவை விருத்தி செய்யவில்லையெனின் நீங்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து இருக்கும் வெறும் பார்வையாளர்களே… உடனே ஒரு உதிப்பு என் மனதில் தோன்ற இது தான் சந்தர்ப்பம் இன்று சரி நூலகத்திற்கு போய் அமர்ந்து புத்தகங்களை வாசித்து, தேவையான புத்தகங்களை எடுத்து வர வேண்டும் என நினைத்து கொண்டு நண்பியை அழைத்தேன்… அவளும் மறுப்பு தெரிவிக்காது அழைத்த அடுத்த கனமே சரியென தலையாட்டினாள்.. என் மனதில் தோன்றிய உதிப்பு அவள் மனதிலும் தோன்றியதோ என்னவவோ…

புத்தகப் பையை காவலாளி பெண்ணிடம் கொடுத்து விட்டு நூலகம் நோக்கி நடையை போட்டோம். ஆஹா…… என்ன ஒரு அழகு…என்ன ஒரு அமைதி…கண்கள் பார்க்கும் திசையெங்கும் புத்தகங்கள்….அங்கே சென்றதும் புத்தகங்களுக்கும் எனக்கும் ஒரு புது வித காதல் பிறந்தது போல உணர்ந்தேன்…பார்க்கும் திசையெங்கும் புத்தகங்கள் என்னை வா வா என்னை வாசி என அழைப்பது போல உணர்ந்தேன்… முதலாவது மாடியில் புத்தகங்கள் இருக்கும் அந்த அறை கதவை திறந்தேன்… ஒவ்வொரு இறாக்கைகளிலும் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது…

என் கைகளால் ஒவ்வொரு புத்தகங்களாய் வருடிக் கொண்டே சென்றேன்…. கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் புரட்டி புரட்டி பார்த்தேன்… புத்தகங்கள் முழுவதுமாக இங்கே ஆங்கில மொழியில்ல்லவா இருக்கிறது…என என் நண்பி முகத்தை சுளிக்க நான் அவளை பார்த்து அதற்கென்ன எந்த மொழியில் இருந்தால் என்ன வந்ததற்காகவாவது ஒரு புத்தகத்தை எடுத்து செல்லவே வேண்டும் என அவளை பார்த்து கூற அவளும் மீண்டும் புத்தக இறாக்கைகளில் புத்தகங்களை தேட துவங்கினாள்…இருவரும் இரண்டாவது மாடி மூன்றாவது மாடி என படி படியாய் இறங்கி புத்தகங்கள் தேடி களைத்து விட்டு மீண்டும் முதலாவது மாடிக்கே வந்து சேர்ந்தோம்…

இதற்கு மேல் என்னால் இயலாது நான் போகிறேன் என என் நண்பி களைப்பு மிகுதியில் கூற நான் இல்லை இல்லை இந்த ஒரு முறை எம் கண்களில் ஒரு நல்ல தமிழ் கதைப் புத்தகம் கிடைக்கும் வா தேடலாம் என தேடினோம்…

புத்தகம் என்று சொன்னாலே என் மனதில் தோன்றுவதென்னவோ இந்த கதைப் புத்தகங்கள் தான்… பாடசாலை செல்லும் நாட்களில் நான் படிக்காத கதைப் புத்தகங்கள் இல்லை என்று தான் சொல்லலாம் அந்தளவு கதை பிரியர் அல்லவா நான்…ஹிஹிஹி

அந்த வேளையில் என் கண்களில் பட்டது ஒரு புத்தகம்… நீங்கள் நினைப்பது போல அது தமிழ் மொழிமூலமான புத்தகம் அல்ல ஆங்கில மொழி மூலமான ஒரு புத்தகம்.கண்டதும் அவசரமாக அதை எடுத்து அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து படிக்க தொடங்கினேன். யாராலும் விளங்கி கொள்ள கூடிய இலகுவான ஒரு மொழிநடையில் அந்த புத்தகம் எழுத பட்டிருந்தது…வாழ்க்கையை ஊக்கப்படுத்துவதாய் அந்த புத்தகத்தின் பெயர் அமைந்திருந்தது… ஆனால் கவலை என்னவெனில் அந்த புத்தகத்தின் பெயர் எனக்கு தற்பொழுது ஞாபகம் இல்லை…வாசிக்க வாசிக்க வாசித்து கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றியது…அதற்கென்ன இந்த புத்தகத்தை இன்று எடுத்து சென்று விடுதியில் இருந்து நிம்மதியாக வாசிக்கலாம் என நினைத்து கொண்டு எழுந்தேன்…  என் நண்பியும் அவளது நீண்ட நேர தேடுதலின் விளைவாய் ஒரு புத்தகத்தை கையில் எடுத்தவளாய் என்னிடம் வந்தாள்… நாம் இருவரும்  புத்தகங்களை எடுத்துக் கொண்டு மேலே புத்தகம் வழங்கும் அந்த அலுவலரிடம் பதிவு செய்ய சென்றோம்…என் புத்தகத்தை அந்த அலுவலரிடம் கொடுக்க அவர் என் முகத்தை ஒரு மாதிரியாக நோக்கினார்…புத்தகத்தை திருப்பி திருப்பி பார்த்தார்.மற்றைய அலுவலரிடம் ஏதோ கேட்க அந்த அலுவலரும் ஏதோ சொல்ல நானும் எனது நண்பியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டோம். பிறகு அந்த அலுவலர் என்னை பார்த்து இந்த புத்தகத்தை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் இது பார்வைக்காக மாத்திரம் வைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இதனை கொண்டு செல்ல முடியாது என சொல்ல…எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை…அப்படியா சரி என தலையாட்டி விட்டு என் நண்பியின் முகத்தை பார்க்க அவளோ அப்போவே சொன்னேன் வாடி போலாம் னு கேட்டியா என என்னை பார்த்து சிரித்தாள்… அறிவை வளர்க்க சென்று இப்படி அநியாயமாக அவமான பட்டுடியே என என் ஆழ் மனம் சொல்வது என் செவிப்பறைக்கு நன்றாகவே கேட்டது… திரும்பவும் அந்த புத்தகத்தை அதே இடத்தில் வைத்து விட்டு வேறு ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு விடுதிவந்து வந்து சேர்ந்தோம்…அனுபவங்கள் வித்தியாசமானவையல்லவா….

Rtr. Fathima Rizmina

Share this content:

Leave a Reply

Your email address will not be published.