காதல் பயணம் அதுவே கடைசிப் பயணம்

காதல் பயணம் அதுவே கடைசிப் பயணம்

பென்தொட்டை எனும் கடற்கரையோரத்திலே இடம்பெற்ற திகில் சம்பவம் இது. காலங்கள் கடந்த போதிலும் கட்டிப் போட முடியாத பல கதைகள் உலகில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறானதொரு திகிலூட்டும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

கன நாள் காத்திருந்து கரம் கொண்ட காதலனின்

கைகோர்த்து ஈரக்காற்றின் கதகதப்பில்

கடற்கரையோரமாய் கரைமணலில்

கால் புதைய நடப்பதன் சுகத்தை என்னவென்று நானுரைப்பேன்?

கூடவே காற்றோடு காற்றாய் காதல் நினைவுகளைக் கலையாமல் கண்முன்பே காண்பிக்கும்

காதல் கானங்களின் கலைநயமும் கற்பனைகளும்

காலம் தாண்டியும் கண்ணோரமாய்க்

கரையாத காட்சிகளாகக் கூடவே நிற்கும்…

அவ்வாறு தான் அன்று அவளும் அவள் அன்பனும்

அலைமோதும் கரையோரம் அடங்காத ஆசைகளோடும்

அலைப்பாயும் எண்ணங்களோடும்

ஆறாத நினைவுகளை அள்ளிக் கொண்டு

அன்போடு ஒருவரையொருவர் அரவணைத்துக் கொள்ள , ஆதவனும் விடை பெற்றான்

ஆகாயமெல்லாம் அந்தியொலி வீச……..

ஓரமாய் ஒதுங்கி ஒருவரையொருவர் ஒற்றுமையாய் ஒன்றிக்கொள்ள

ஓராயிரம் ஆசைகள் ஒப்பனையில்லாக் காட்சிகள் ஓய்வில்லாமல் ஓடின அந்தவொரு நொடியிலே…

பாவமவள் பேதையாய் பெற்றிருக்கும் இந்த இன்பம்

பெற வேண்டும் வாழ்வெல்லாம் எனப்

பேராவல் கொண்டதற்கு

பெறக் காத்திருந்தது என்னவோ பேரிடிதான்

நீண்ட நேரம் நிறையப் பேசி நிகழ்காலம் மறந்தோர்க்கு,

நிலவொளி படர நீலவானும் நிறங்கெட்டது

நிலையில்லா இவ்வுலகின் நிதர்சனத்தை உரைக்கவா?

ஆண்டுகள் பல ஆவலோடு பார்த்திருந்த  அந்நாளை

ஆனந்தமாய் அனுபவித்த அவள் சற்றேனும் அறிந்திருக்கவில்லை அடுத்தடுத்து நடப்பதெல்லாம் அதிர வைக்கும் அகோரமென

சுழலும் இவ்வுலகினது சுவாரஷ்யமான  சூழலைச்

சுற்றிப் பார்த்தோரிருவரும்

சுகமாக இளைப்பார சொகுசான இடம் தேடிற்று.

சொக்கி நிற்கும் பெண் போல

சுற்றி வளைந்த மரத்தடியில் சுண்டலோடு அமர்ந்தனர் சுற்றியுள்ளோர் நீங்கவே

இரவின் இருட்டிலே இளையோர் இருவரும்

இதமான தென்றலோடு இன்னிசை கேட்கையில்

இயல்பிறந்த ஓசைகள் இங்குமங்கும் ஒலித்திட

இனம்புரியா இவையென்னவென 

இவனும் இடமெல்லாம் தேடினான்

தொடர் மணலில் தொலைந்த இருவருக்கும்

தொலைவில் ஓர் ஒளி தெரிய

தொடர்ந்தனர் அவ்விடம் நோக்கி

தொட்டவள் கைகளைப் பிடித்துக் கொண்டே

மறைத்துக்கொள்ளும் இருட்டிலே

மங்காத நிலவொளியில்

மணலெங்கும் நடந்தனர் மைல்கள் பல

மனிதரில்லா நேரமதில்

மழலையோசை மட்டுமங்கு  மணிக்கணக்காய் ஒலிக்கையிலே

மற்ற இடங்களிலெல்லாம் மயான அமைதி!!!!!

ஒளி தெரிந்த அவ்விடத்தில் ஒருவர் மட்டும் ஒய்யாரமாயிருக்க ஓடியவர் பக்கம் சென்று ஓய்வொன்றும் பாராது

ஒற்றை விரலால் தட்டிப் பேச

ஓங்கியவர் பார்த்தவுடன்

ஓவென்றவள் ஓலமிட்டாள் உடம்பெல்லாம் நடுநடுங்கி

உரக்கக் கத்தியவளை உறுதியாய் பிடித்தவன்

உருக்குலைந்த அவ்வுருவை உதறிவிட்டு ஓடலானான்

உடல் பாதி கருகி உயிர் பறிக்கும் அந்தக் காட்சி

உண்மையில் உலகில் எவரும் கண்டதுண்டோ?

எரிந்து விட்ட நெருப்பிலே தீக்குளித்தெழுந்தவன்போல்

எரித்தும் எரியாமலும் ஏடாகுடமாய் எழுந்து நின்று

ஏக்கக் குரலில் ஏங்கி அழுது கொண்டே எதிரில் நிற்போரை

எரித்து விடப்போல் பார்த்தது

கனவா இது அன்றிக் கற்பனையா எனக் கற்சிலையாகிப் போனோர்க்கு

கைப்பேசி மணி அழைப்பு வர

கடாரென விழித்துக் கொண்டனர்

கடவுள் அருளால் கண்ணருகே யாதொன்றுமில்லை

கண்டதெல்லாம் வெறும் பிரம்மையென

காதலியவளையும் கலங்கிய தன்நெஞ்சையும் தடவிக் கொடுத்து

கனப்பொழுதும் தாழ்த்தாது  கடகடவெனக் கிளம்பினர் கைகளைப்பற்றிப் பிடித்துக் கொண்டு….

காதலியவள் கைப்பேசி கணீரென மீண்டும் மீண்டும் ஒலிக்க

 கதறல் சத்தமோ அவள் காதைக் கிழித்து விட

கண்ணீர் மல்க காதலனை நோக்கினாள்

 கண்டதெல்லாம் கறுத்த அவ்வுருவே அன்றிக்

கைகோர்த்த கனியனையல்ல…

மறைந்த காதலனைத் தேடி மங்கையவள் ஓடுகையில்

மாய அவ்வுரு மட்டும்தான் மணற்தொடரெங்கும் தோன்றியது

மனம்பதைத்து மரண பிடியில் மாட்டிக்கொண்ட அவளோ

 மண்புழுவாய் துடிதுடித்து மடிந்து வீழ்ந்தாள் மண் மீதினில் மயக்கமுற்று

கல்மோதும் கடலலைகள் களைத்தவள் முகத்தில் பட

கலக்கத்துடன் கண்விழித்தெழுந்தாள்

கை நீட்டி அவள் முன்பே காதலனவனைக் கண்டவுடன்

 கத்திக் கொண்டே அவனருகில்

 கட்டிக் கொள்ள ஓடிற்றாள் கண்ணீர் பெருகி வழிந்திடவே

இளைஞனைக் கண்டவுடன் இன்பமாய் இறுக்கிக் கொள்ள

ஈர இரத்தமோ இளையவள் முகத்தை இடைவிடாது நனைத்திடவே

இலகியவள் விலகி  இதயம் குலைந்து நோக்கினாள்

இனம்புரியா ஏதோவொன்று அவன் இன்முகத்தில் இழையோடி இருந்ததை

பதறி அவள் பார்த்ததுமே பரபரப்பாய் அழைத்துக் கொண்டு படபடவென நடந்தாள் பாதையை நோக்கியே

பயமுறுத்தும் இவ்விடத்தை விட்டு பாதி வழி செல்கையிலே

பரிதவித்துப் போனாள்பாசம் கொண்டோன்

பாதையிலே படுத்திருப்பதைப் பார்த்தவுடன்

தன்னவன் தரையோடு படுத்திருக்க தன்னருகே யாரென

தயக்கத்தோடு தலையைத் திருப்பியவள் பார்க்கையிலே

தலைவன் உருவில் நின்ற தரிகெட்ட அந்த ஆத்மாவோ

தன் பசி தீர்த்து தலை தெறிக்கச் சிரித்தது

அகோர ஆத்மாக்களின் விளையாட்டில்

அகப்பட்டுக்கொண்ட இருவரில் ஆர்ப்பரிக்கும் அழகானவன்

ஆறாயோடும் இரத்தத்தில்

ஆள் மூழ்கிக் கிடப்பதை அழுது கொண்டே அவதானிக்க அலறடுலோடு ஓடினாள் அன்பனை நோக்கி அவன் அருகிலே…

வழி மீது விழி வைத்து

வரும் நாளைப் பார்த்திருந்து – ஆசையாய் வந்தானோடு

வாழ்நாள் முழுதும் வாகாய் வாழ நினைத்ததில் என்ன குற்றம்?

வாழ்தல் என்றும் உன்னோடு தானென வாழ்வை  வண்ணம் பூச வந்தவனை

வதைத்துக் கொன்ற கொடூரம் அந்த வானுக்கும் அடுக்காது என

வாய்விட்டு கூவியழுதாள் வலி கனத்த இருதயத்தோடு

அன்புக் காதலன் பிரிவினாலே

 ஆறாத துயருற்ற அவன் காதலியும் ஆருயிர் தோழனில்லா நிஜமதில்

 அநாதையாய் அலைவதை விட அன்பனவனுடனே சேர்ந்தழிவது மேலென

 அலை சூழும் ஆழ்கடலிலே அடைக்கலம் தேடினாள்

ஆற்ற முடியா நெஞ்சதுக்கு ஆறுதலாக…

கைபிணைய எண்ணிய இரு காதல் நெஞ்சங்களும்

கல்லறையைக் கடைசியாய்ப் பெற

காவு கொண்ட கொடூர ஆன்மா

களி கொண்டு மகிழ்ந்தது

கடமை முடித்த களைப்பிலே

பசி கொண்ட ஆன்மாக்கள் பழிதீர்க்கும் பாடமெல்லாம் பலகாலம் பறந்த போதும் பரவலாய் இருந்து கொண்டுதான் இருக்கின்றன

பாரெல்லாம்

பலர் விரும்பும் கடற்கரையோரம்

 பாவம் இரு பாசம் கொண்ட பறவைகளைக் கொன்று பழி தீர்த்த பரிதாபம்

பல ஆண்டுகள் கடந்தாலும் பதறவைக்கும் உள்ளத்தை…

Rtr. சபியா சிராஜுத்தீன்

Share this content:

Leave a Reply

Your email address will not be published.