இலங்கையின் பொதுவான பாரபட்சங்கள்

இலங்கையின் பொதுவான பாரபட்சங்கள்

இலங்கையில் சமத்துவம் பேணப்படும் முறையினை சற்று ஆராய்வோம் இலங்கையானது பிரதானமாக 3 இனத்தவரை கொண்ட நாடு. இனத்துவ ரீதியாக பாகுபாடு காட்டப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயம்.இந்த விடயம் பல நூற்றாண்டுகளாக கேள்விக்கு உட்படுவது வழமையான விடயமாகும். இது ஒரு புறம் இருக்க இலங்கையில் பல்வேறுபட்ட விடயங்களில் அனைத்து மக்களும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற விடயங்கள் திரைக்கு பின்னால் மறைக்கப்பட்டுள்ளது. அடிப்படை விடயங்களில் இருந்து ஆடம்பர விடயங்கள் வரையில் அனைத்து மக்களும் சிறுவயதில் இருந்து முதிய வயதை அடையும் வரை இதன் தாக்கத்தை அனுபவிக்கின்றனர். 

பாடசாலையை எடுத்துக்கொள்வோம் இன்று இலங்கையில் எத்தனை பாடசாலைகள் இயங்குகின்றன எனினும் அவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கைகளை எடுத்து நோக்கும் போது ஒரு பிரதேசத்திலே காணப்படும் பாடசாலைகளாக இருந்தாலும் ஒரு பாடசாலை அளவுக்கு அதிகமான மாணவர்களையும் ஒரு பாடசாலை இழுத்து மூடப்படும் அளவிற்கு குறைவான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு இயங்குகின்ற பொழுது மாணவர்களிடையே பாரபட்சம் ஏற்படுகிறது. இது தரம் குறைந்த பாடசாலை, இது தரம் கூடிய கல்வி என்ற ஏற்றத்தாழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அன்றி எத்தனையோ பாடசாலைகளில் சில பாடங்களுக்கு ஆசிரியர் கூட இல்லை .இன்று பல்வேறு பாடசாலைகள் மாணவர் பற்றாக்குறையால் இழுத்து மூடப்பட்டுள்ளன. 

கல்வி என்பது அனைவருக்கும் இலவசம் என்ற பேரிலே கல்வியின் ஊடாக அனைத்தும் அரசாங்க பாடசாலைகளும்வருமானம் ஈட்டுகின்றது.இலவசக் கல்வி என்றால் எதற்காக தனியார் பாடசாலைகளுக்கு அரச அங்கிகாரம்கொடுத்து அப் பாடசாலைகளை உயர்தர கல்வி வழங்கப்படுகின்ற இடங்களாக மக்கள் மத்தியில் சித்தரிக்கும் அளவிற்கு அவர்கள் உருவாக்கி விடுகின்றனர்., தங்களது பிள்ளைகள் கல்வி கற்கும் இடங்களில் கூட பாரபட்சத்தை இது ஏற்படுத்துகின்றது. 

மக்களுக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் கூட அரசியல் தலைவர்கள் சிலரால் பறிக்கப்படுகின்றது. உதாரணமாக ஒரு பாதை போடும் திட்டத்திற்காக ஒரு தொகை நிதி ஒதுக்கப்படும் பொழுது. உண்மையில் அதற்கான தொகை முழுவதும் அத்திட்டத்திற்கு பூரணமாக செலவழிக்கப்படுகின்றதா என்றால் சந்தேகமே, அவை அரசியல் தலைவர்களால் கொள்ளை அடிக்கப்படுகின்றது என்றால் மறுப்பதற்கும் இல்லை. இது பிரதேச ரீதியாக சமத்துவத்தை அழிக்கின்றது. 

பல்கலைக்கழகத்தில் கூட சமத்துவம் பேணப்படுவதில்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல நிதி கொடுக்கப்டுவதில் கூட வருமானத்தை வைத்து கணிக்கப்படுகின்றதே தவிர வருமானத்தின் பின் உள்ள  உண்மைத்தன்மை ஆராயப்படுவதில்லை. அரசாங்க வேலை செய்பவர்கள் பெற்றோர்களாக இருந்தால் அந்த பிள்ளைகளுக்கு பாரபட்சம் பார்க்கப்படுகின்றது. ஏனைய மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைப்பதில்லை. வெறும் கிராம சேவகரின் சான்றிதழ் ஊடாகவே வருமானம் தீர்மானிக்கப்படுகின்றது. கல்வி அனைவருக்கு வழங்கப்பட்டாலும் கூட பல்வேறுபட்ட விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. 

அரசாங்க அலுவலகங்களை எடுத்து நோக்கும் பொழுது பல்வேறுபட்ட  அரச நிறுவனங்களில் அதிகாரத்துவமே வேலை செய்கின்றது. பதவியில் உயர்வில் இருப்பவரின் ஆதரவோடு போகும்பொழுது அங்கே பாரபட்சம் பார்த்து வேலைகள் நடைபெறுகின்றது. ஆனால் ஒரு சாமான்ய மனிதன் செல்லும் பொழுது காலங்கள் வீணடிப்பதும், வீண் அலைச்சல்களுக்கு உள்ளாக்குவதும் தினம் தினம் பல்வேறு அரச நிறுவனங்களில் நடைபெறுகின்றது.  

இலங்கையில் எத்தனையோ மக்கள் பசியினாலும், இருப்பதற்கு வீடு இன்றி தவிர்த்துக்கொண்டு இருக்கும் பொழுது அவர்களுடைய  வாழ்வை உயர்த்துவதற்காக செலவழிக்கும் பணத்தின் அளவு குறைவு. இவவச வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தியும் அதனை முழுவதும் ஆக முடித்துக் கொடுக்காமல் அரைபாதியில் பல வீடுகள் விடப்பட்டு உள்ளன. ஆனால் அரசியல்வாதிகளின் வசதியான வாழ்வுக்காகவும் இலங்கை இராணுவத்திற்காகவும் அரசு செலவு செய்யும் பணம் பல மடங்கு. இங்கும் பாரபட்சம் பார்க்கப்படுகின்றது அதிகாரத்துவ ரீதியாக. 

வைத்தியத்துறையில் கூட நிகழ்கின்றது அரச வைத்தியசாலையில் வேலை செய்பவர்களாக இருந்தால் வைத்தியம் கூட விரைவாக முடிந்து விடுகின்றது என்ற அளவுக்கு இன்று அரச வைத்தியசாலை இயங்குகின்றது. ஒரு உயிரை வைத்தியர் தவறுதலாக கொன்று விட்டால் கூட மறைக்கப்டுகின்றது. எத்தனைனயோ பிரசவநிலமைகளில் தாய் அல்லது சேய் மரணித்து உள்ளது. இதற்கான தண்டனைகள் வழங்கப்படுகின்றதா  என்றால் கேள்விக்குறி. சாமான்ய மனிதன் அதிகாலை சென்று வரிசையில் நிக்க, செல்வாக்கு உள்ளவர்கள் அவர்களுக்கு பிறகு வந்து உடனே சிகிச்சையை முடித்து விட்டு செல்லுகின்றனர். இலங்கையில் இலவசமாக அனைவருக்கும் என்று கொடுக்கப்படும் விடயங்கள் அனைத்திலும் பாரபட்சம் பார்க்கப்படுகின்றது. 

தோற்றங்களை கொண்டு மக்கள் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒரு அலுவலகத்திற்கு ஒரு நபர் செல்லும் பொழுது அவரது தோற்றம், அவரது நடை, உடை பாவனை வைத்தே மரியாதையான பேச்சும் உள்ளது. அனைவருடனும் ஒரே மாதிரியான தொடர்பாடல் நிகழ்வதில்லை மரியாதை குறைவான தொடர்பாடல் பல இடங்களில் நடந்து உள்ளதை ஒரு சாமான்யனிடம் கேட்டு தெரிந்து கொள்ளமுடியும். 

அது மட்டும் அல்லாமல் நீதித்துறையில் கூட பாரபட்சம் ஒரு அதிகார உயர்வில், பணம் படைத்தவன் குற்றத்தை செய்தால், ஆவன் குற்றவாளியாக இருந்தாலும் நிரபராதியாக்கப்படுகின்றான். ஒரு ஏழை நிரபராதியாக இருந்தாலும் கூட குற்றவாளியாக்கப்படுகின்றான்.; எத்தனையோ அதிகாரிகளின் குற்றங்கள் மறைக்கப்பட்டு உள்ளதோடு. சிறு குற்றங்களை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுக்கொண்டும் உள்ளனர். ஒரு குற்றவாளியிடம் பணம் இருந்தால் நீதி கூட மாறிவிடும் நிலையே இங்கு காணப்படுகின்றது. உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒருவனாக இருந்தாலும் அவன் மறைமுகமாக அழிக்கப்படுகின்ற நிலமையை காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்களில் ஊடாக பாரபட்சம் அடக்குமுறையை காணமுடிகின்றது. 

இலங்கையில் இனரீதியான பாகுபாடுகள் பாரபட்சங்களை கண்முன்னே காட்டி பொதுவாக அடிப்படையிலே அனைவருக்கு இடம் பெறுகின்ற பாரபட்சங்கள் மத ரீதியான பாரபட்ச போர்வையால் திட்டமிட்டபடி மறைக்கப்படுகின்றது.இலவசக் கல்வியில் பாரபட்சம், இலவச மருத்துவ சேவையில் பாரபட்சம், பாடசாலை கல்வியில் பாரபட்சம், அரச சேவைகளில் பாரபட்சம். இவ்வாறாக அனைத்திலும் பாரபட்சம் இருக்கும் பொழுது அனைத்தையும் மூடி மறைக்கின்றது இனப் பாகுபாடு. 

Rtr. ஜெஸி பகீரதன்

Share this content:

Leave a Reply

Your email address will not be published.